வன்னிப்பேர் கிராமத்தில் 22 சென்ட் நிலம் தனிநபர் அவரிடம் இருந்து மீட்டு தர கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர் !
650 குடும்பங்களின் பொதுப் பயன்பாட்டிற்காக மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கக் கோரிக்கை – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி!
விழுப்புரம் மாவட்டம்,
மரக்காணம் வட்டம், வன்னிப்பேர் கிராமத்தில் ஊரின் மையப் பகுதியில் உள்ள 22 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாகவும், அந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்னிப்பேர் கிராமத்தில் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், ஊரின் மையப் பகுதியில் உள்ள 22 சென்ட் நிலத்தைப் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானமாகவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் ஒதுக்க வேண்டும் எனக் கோரி, கிராம மக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (VAO), வட்டாட்சியர், கோட்டாட்சியர் (RDO), சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் மனுக்கள் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்
மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தில் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தகரக் கொட்டகைகள் அமைத்தல் உள்ளிட்ட செயல்கள் மூலம் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மனு அளித்தவர்களின் வீடுகளுக்கே சென்று சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் மனு அளித்த மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரின் மையப்பகுதியில் உள்ள இந்த நிலம் பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே கிராம மக்களின் விருப்பமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமை மற்றும் வகைப்பாட்டை முறையாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டால் அதை அகற்றி, நிலத்தை அரசு விதிகளின்படி பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னிப்பேர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேட்டி ஊர் பொதுமக்கள் சுரேஷ்







