நாகூர் கந்தூரி விழா தூய்மை பணிக்காக சென்ற மயிலாடுதுறை நகராட்சி தூய்மை பணியாளர்களை குப்பைக அள்ளும் சரக்கு வாகனத்தில் 60 கிலோமீட்டர் தூரம் ஏற்றி வந்த வீடியோ வெளியாகி உள்ளது, 11 நாட்கள் பணிகள் செய்து பணம் எதுவும் வழங்காமல் சான்றிதழ் மட்டும் அளித்ததாக கூறி, நகராட்சி அலுவலர்களுடன் தூய்மை பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக 15 பேர் வேலை பார்த்து வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற்ற புகழ்பெற்ற கந்தூரி விழாவில் தூய்மை பணியை மேற்கொள்வதற்காக இவர்கள் அனைவரும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு நாகூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாகூரில் தூய்மை பணிகளை முடித்த பின்பு நேற்று மாலை மயிலாடுதுறை திரும்பினர். அவர்கள் திரும்பி வருவதற்கு வாகனம் ஏதும் ஏற்பாடு செய்யாத நிலையில், தூய்மை பணிகளை மேற்கொள்ளும் குப்பை சேகரிக்கும் சரக்கு வாகனத்தில் 15 தூய்மை பணியாளர்களும், ஆடு மாடுகளை ஏற்றி செல்வது போல், 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மயிலாடுதுறை நகராட்சிக்கு வந்து சேர்ந்தனர். திரும்பி வருவதற்கு வாகனம் ஏற்பாடு செய்யாததுடன், தங்களுக்கு எந்த விதமான பயண படியும் வழங்கவில்லை, வாகனத்தில் டீசல் இல்லாமல், தாங்கள் கடன் வாங்கி டீசல் போட்டுக் கொண்டு சரக்கு வாகனத்தில் வந்ததாக தூய்மை பணியாளர்கள் ஆதங்கம் தெரிவித்தவுடன், நகராட்சி அலுவலக வாசலில் நின்று அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்கள் வேலை என்று அழைத்துச் சென்று, 11 நாட்களாக வேலை வாங்கிவிட்டு வெறும் சான்றிதழ் மட்டுமே வழங்கியதாகவும், பணப்பயன் எதுவும் வழங்கவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







