மயிலாடுதுறை அருகே போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 3 வயது சிறுமியின் மழலைப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் :-
தமிழகம் தொடர்ந்து போலியோ இல்லாத மாநிலமாக இருந்து வரும் நிலையில், குழந்தைகளுக்கு போலியோ நோய் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இன்று மயிலாடுதுறை, செங்கல்பட்டு, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என மொத்தம் 69,386 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 582 மையங்களில் இலவச போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை அருகே கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த சஷ்விகா என்ற 3 வயது சிறுமி, போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொண்டு, மற்ற குழந்தைகளும் தவறாமல் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும் என தனது மழலை மொழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில், “என் பெயர் சஷ்விகா. எனக்கு மூன்று வயது. நான் சொட்டு மருந்து போட்டுக்கொண்டு வந்துள்ளேன். இதேபோல் நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து போடுங்கள். நல்ல ஹெல்த்தியாக இருக்கும்” என அந்த சிறுமி மழலை மொழியில் பேசியுள்ளார். 3 வயது சிறுமியின் இந்த அழகான விழிப்புணர்வு பேச்சை அவரது பெற்றோர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.







