திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் சாய்ந்தும், ஒரு சில இடங்களில் தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் குறைந்த அளவே குறுவை சாகுபடி செய்துள்ள போதிலும், சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வரும் 26 ஆம் தேதி வரை திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருவாரூரில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் குளிர்ந்த வானிலை நிலவினாலும், இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், சாலைகள் சேதமடைந்துள்ளதன் காரணமாக இரு சக்கர வாகனத்தில் செல்வோர் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் பெய்யும் மழையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பம்பு சட்டம் மூலம் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் குறுவை அறுவடை பணிகளை தொடங்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கிளியனூர், புனவாசல், வடகட்டளை, மாயனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா இளம் நெல் பயிர்கள் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக தண்ணீரில் மூழ்கி உள்ளது.
மேலும் குடவாசல், புழுதிக்குடி, அன்பிற்குமுன்டான், வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து பாதிப்படைந்துள்ளன. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 300 ஏக்கருக்கும் மேலாக குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 200 ஏக்கருக்கும் மேலாக மழைநீரில் மூழ்கி உள்ளன.
இதுவரை ஒரு ஏக்கருக்கு 10000 ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும், அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் இப்படி ஆகிவிட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். உடனடியாக அரசு அலுவலர்கள் வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலர்கள் நேரடியாக பாதிக்கபட்ட பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது…
மழை நின்ற பிறகு, தண்ணீர் வடிந்த பிறகு நெல்மணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அறுவடை செய்யலாம் எனவும், ஒருவேளை அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தால் அங்கு உரிய ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி குறைவான அளவில் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், கால்நடை வைத்துள்ள விவசாயிகளும் அறுவடை பணியின் பொழுது மழை வந்துள்ளதால், வைக்கோல் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போகும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

















