காட்பாடியில் வீணாகும் மக்கள் வரிப்பணம்! ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் பராமரிப்பின்றி பாழடைந்த அவலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தேசிய நெடுஞ்சாலையோரம், சுமார் 2014–2015-ஆம் நிதியாண்டில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம், உரிய பராமரிப்பின்றி பயன்பாட்டுக்குத் தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.
பயணிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மழை, வெயில் நேரங்களில் பாதுகாப்பாக ஒதுங்குவதற்காகக் கட்டப்பட்ட இந்த நிழற்கூடம், தற்போது பராமரிப்பின்றிப் பாழடைந்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பொதுச் சொத்து முறையாகப் பராமரிக்கப்படாததால், அரசின் நிதி வீணடிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு உயர் பதிவி ஊழியர்கள் அலட்சியத்திற்கு யார் பொறுப்பு..?
ரூ.6 லட்சம் செலவில் கட்டப்பட்ட பொதுமக்களுக்கான நிழற்கூடத்தைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசுப் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாடின்றிப் பாழடைந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அரசு உயர் பதவி ஊழியர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது நிர்வாக அலட்சியத்தையே வெளிப்படுத்துவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, வேலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, நிழற்கூடத்தைச் சீரமைத்து, பராமரிக்க தவறிய சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் சொந்த பணத்தில் சுண்ணாம்பு அடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கட்டிடம் பராமரிப்பின்றிப் பாழடைந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, கடமையைச் செய்யத் தவறிய பொறுப்புடைய உயர் பதவி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசுப் பணம் வீணடிக்கப்பட்டது உறுதியானால் விதிமுறைகளின்படி இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.















