மன்னார்குடி அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு புகார் 4 ஆண்டுகளாகக் கட்டி முடிக்கப்படாத 28 வீடுகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து 3 தவணைப் பணம் எடுத்ததாகக் குற்றச்சாட்டு மழைக்காலத்தில் கூரை வீடுகளில் அச்சத்துடன் வாழும் ஏழை மக்கள்
கோட்டுர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 28 வீடுகள், கடந்த 4 ஆண்டுகளாக முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் பாதியிலேயே நிற்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து மூன்று தவணைகளாகப் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வீடுகள் கட்டி முடிக்கப்படாததால் ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், கோட்டூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தில் ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 28 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு, ஒரு வீட்டிற்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் கடந்தும், தற்போது வரை அடித்தள அளவிலேயே கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகப் பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வீடுகளின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால், அரசின் திட்டத்தின் மூலம் சொந்த வீட்டில் குடியேறலாம் என்ற தங்களது கனவு நிறைவேறாமல் இருப்பதாகக் கூறுகின்றனர். இதற்கிடையே, வீடு கட்டுவதற்காகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து மூன்று தவணைகளாகப் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர் அந்தத் தொகையைப் பெற்றுள்ளதாகவும் பயனாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாகப் பணம் எடுக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் ஒப்பந்ததாரரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பயனாளிகளின் வேதனையாக உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பான வீடுகள் இல்லாமல் பழைய கூரை வீடுகளில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகப் பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஏழை மக்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டும், பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி முடிக்கப்படாத நிலை அப்பகுதியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புழுதிக்குடி கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 28 வீடுகளின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுத் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டும், 4 ஆண்டுகளாக வீடுகள் கட்டி முடிக்கப்படாதது ஏன்? பயனாளிகளின் புகார் மீது மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா? என்பதே புழுதிக்குடி கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பேட்டி
1, சரோஜா பயனாளி புழுதிக்குடி
2, ராஜம்மாள் பயனாளி புழுதிக்குடி

















