மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் கடும் விலை உயர்வு, விலையை கட்டுப்படுத்தவும், உர மானியத்தை அதிகப்படுத்தி தரவும், விவசாயிகள் கோரிக்கை :-
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், இந்த ஆண்டு மிகவும் தாமதமாக செப்டம்பர் 1ஆம் தேதி அணை டெல்டா மாவட்ட பாசனங்களுக்கு திறக்கப்பட்டது. தண்ணீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறைக்கு சரி வர வந்து சேராத நிலையில், நிலத்தடி நீர் மற்றும் மழையை பயன்படுத்தி தற்போது விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சம்பா சாகுபடிக்கு தேவையான அடி உரங்கள், பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களின் விலைகள் திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயக் கூலித் தொழிலாளிகள் பற்றாக்குறை காரணமாக, தொழிலாளர்களின் ஊதியம் பல மடங்கு உயர்ந்து உள்ளது. உழவுக்கு பயன்படும் டிராக்டர் வாடகை, நடவு இயந்திர வாடகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது ஏற்பட்டுள்ள உரங்கள் விலை உயர்வு விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. தவெக அரசு தேர்தல் வாக்குறுதியாக நெல் குவிண்டால் 3 ஆயிரத்து 500 என்று வழங்கப்படும் அறிவித்திருந்த நிலையில், சன்னரக நெல்லை 2750 க்கு தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த விலை உயர்வு, விவசாய செலவுகளுக்கு போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அடி உரமாக பயன்படுத்தப்படும் கலப்பு உரங்கள் பொட்டாஷ் ஆகியவற்றின் விலை திடீர் ஏற்றம் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காம்ப்ளக்ஸ் உரம் மூட்டை 1850க்கு விற்பனையானது, தற்பொழுது 2600 ரூபாய்க்கும், 1850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பொட்டாஷ் உரம் மூட்டை 2300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே விலை உயர்வு காரணமாக கடன் சுமையில் உள்ள விவசாயிகள், கூடுதல் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். உரத்திற்கான மானிய விலையை மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















