தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு தனி கோவில் உள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் அனுமதி இன்றி நடக்கும் தனியார் வாகன நிறுத்துமிடத்தில் அரசு அறிவிப்பை மீறி அதிக கட்டண வசூல்.
தனியார் பார்க்கிங் நடத்த அனுமதி இல்லாதபோதும், டெண்டர் விடப்படாத நிலையிலும், அனுமதியின்றி பார்க்கிங் அமைத்து இரண்டு நாட்களில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்த தனிநபர்
அனுமதி இன்றி அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் வசூலிக்கும் தனியார் பார்க்கிங் குறித்து பல துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு
பொதுமக்களிடம் இருந்து முறைகேடான வகையில் வசூலிக்கும் பணம் கோவில் செயல்அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கும் கமிஷன் செல்வதால் இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக புகார்
சரஸ்வதி பூஜை, விஜயதசமி என இரண்டு நாளில் மட்டும் பொதுமக்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் வரை வசூலித்த பணம் எங்கு செல்கிறது என மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா..? பொதுமக்கள் கேள்வி
தென்னிந்தியாவிலேயே திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூர் கிராமத்தில் மட்டுமே ஸ்ரீ மகா சரஸ்வதி அம்மனுக்கு என்று தனி ஆலயம் அமைந்துள்ளது. தமிழ் புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்ந்து சரஸ்வதி அம்மனை வழிபட்ட ஊர் என்பதால் இந்த ஊருக்கு கூத்தனூர் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருட சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, கடலூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து இங்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த ஆலயத்தில் தேர்வுக்கு செல்லும் மாணவ மாணவிகள், புதிதாக பள்ளியில் சேரும் மாணவ மாணவிகள் பேனா,பென்சில் போன்ற எழுது பொருள்களை வைத்து சரஸ்வதி தேவியை வழிபட்டால் கல்வி வளம் பெருகும் என்பது ஐதீகம். இதன் காரணமாக சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு குடும்பம் குடும்பமாக பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் கார்,வேன், பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு முன்புறத்தில் குடவாசல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில், தனியார் பார்க்கிங் வசதி இங்கு கிடையாது என்றும், காருக்கு 30 ரூபாய் வேன் மற்றும் பேருந்துக்கு 50 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு பதாகை முக்கிய அறிவிப்பு என்கிற தலைப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் அந்த முக்கிய அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ள சில அடி தொலைவில் தனியார் பார்க்கிங் ஒன்று இயங்கி வருகிறது. அதில் காருக்கு 50 ரூபாய் வேனுக்கு 100 ரூபாய் பேருந்துக்கு 150 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று பதாகை வைக்கப்பட்டுள்ளது. சாலையை மறித்து பேரிக்காடு அமைத்து வைக்கப்பட்டுள்ள இந்த தனியார் பார்க்கிங்கில் சரஸ்வதி பூஜை அன்று சுமார் 950க்கும் மேற்பட்ட வாகனங்களும் விஜயதசமியான இன்று 1500 க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்கள் வந்து சென்றுள்ளனர்.
அரசின் அனுமதியின்றி நடைபெறும் இந்த கட்டண வசூல் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து கார் போன்ற வாகனங்களில் வரக்கூடிய பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரட்டிப்பு கட்டணம் கொடுத்து அவர்கள் வாகனங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலேயே ஒரே கோவிலான சரஸ்வதி தேவிகோவில் வளர்ச்சிக்காக, கோவில் நிர்வாகத்துக்கு தான் இந்த கட்டணம் செலுத்தப்படுகிறது என்ற எண்ணத்தில் பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் டோக்கன் பெற்று பணம் செலுத்தி வருகின்றனர். ஆனால் இவை அனைத்தும் முறைகேடான வகையில் தனி நபரின் கைகளுக்கு செல்வது பொதுமக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
இது குறித்து நேற்றே நமது தொலைக்காட்சியில் செய்து வெளியிட்டும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனபோக்கு காட்டுகின்றனர். ஒப்பந்தக்காரரிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் இவ்வாறு செயல்படுகின்றார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த இரண்டு நாளில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் அளவுக்கு மேல் முறைகேடான வகையில் தனியார் ஒப்பந்தக்காரர் வசூலித்துள்ளதாகவும், இதில் கோயில் செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கும் கமிஷன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகத்தான் பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையில் நேற்று நாம் செய்தி வெளியிட்டும் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமல் தனியார் ஒப்பந்தக்காரர் பணம் வசூலிக்க அதிகாரிகள் உடந்தையாக உள்ளதாக கூறப்படுகிறது.
உடனடியாக திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் இந்த பண மோசடி சம்பவத்தில் நேரடியாக தலையிட்டு, இந்த இரண்டு நாளில் மட்டும் வசூலித்த தொகை எவ்வளவு..? அந்த பணம் எங்கு உள்ளது..? யார் யாருக்கு செல்கிறது..? என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என திருவாரூர் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

















