திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?
நடவடிக்கை எடுக்கக் கோரி வஃக்பு வாரிய வேலூர் மண்டல அலுவலகம் முற்றுகை.
திருப்பத்தூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள வஃக்பு வாரியத்திற்குச் சொந்தமான மசூதிகள், தர்காக்கள் மற்றும் அறக்கட்டளை சொத்துக்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், முறைகேடில் ஈடுபட்ட முத்தவள்ளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்ககோரி மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தினர் பலமுறை வஃக்பு வாரியத்திற்கும் தமிழக அரசிற்கும் புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்வில்லை எனக் கூறி திருப்புத்தூரைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் ஒன்று சேர்ந்து வேலூரில் உள்ள தமிழ்நாடு வஃக்பு வாரிய வேலூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வஃக்பு வாரியத்திற்குச் சொந்தமான லப்பை, பூரா மசூதி, ஜிம்மா மசூதி, சைதானி பீ தர்கா, திருப்பத்தூர் முஸ்லிம் எஜுகேஷன் டிரஸ்ட், மஜித்-இ-அக்ஷா உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட வஃக்பு சொத்துக்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் வஃக்பு வாரியத்தின் முன் அனுமதி பெறாமல் மசூதி மற்றும் தர்கா சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வஃக்பு சொத்துக்கள் சந்தை மதிப்பை விட மிகவும் குறைந்த விலைக்குக் குத்தகைக்கு விடப்பட்டு, வஃக்பு வாரியத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தியும் வாடகை மற்றும் குத்தகை வருவாய்கள் முறையாகக் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டதோடு, மசூதி நிதிகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரண்டு ஆண்டுகளாக பல மனுக்கள் அளித்தும், அறவழிப் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் நடத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முற்றுகையிட்டனர்.
மேலும், முறைகேடாக ஆக்கிரமிக்கப்பட்ட வஃக்பு சொத்துக்களை மீட்டு, அவற்றின் வருவாயை ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், உடனடியாக வஃக்பு நிர்வாகத்திற்குத் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் என இஸ்லாமிய மக்கள் கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.















