ஆரோவில் மற்றும் அன்னபூரணா இயற்கை வேளாண் பண்ணையை மீட்கக் கோரி மயிலாடுதுறையில் விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :-
பாண்டிச்சேரி அருகேயுள்ள ஆரோவில்லில் உள்ள அன்னபூர்ணா இயற்கை வேளாண் பண்ணையை பாதுகாக்கவும், அதனை மீட்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரோவில் அமைப்பின் ஓர் அங்கமாகத் திகழும் அன்னபூர்ணா இயற்கை வேளாண் பண்ணைக்கு ஐயா நம்மாழ்வார் வருகை தந்து பல இயற்கை விவசாயப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.
சுமார் 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பண்ணையில், 110 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 66 ஆண்டுகள் குத்தகைக்கு ஐஐடி நிறுவனத்திற்கு வழங்கும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட காடுகளை அழித்து சிமெண்ட் சாலைகள் போடும் பணிகளும், வெளிமாநிலத்தவரை குடியேற்றும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டினர்.
சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் அழித்து சிமெண்ட் நகரமாக மாற்ற நினைக்கும் திட்டங்களைத் தடுத்து நிறுத்தி, காடுகளையும் அன்னபூர்ணா பண்ணையையும் மீட்க வேண்டி தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு அன்னபூர்ணா இயற்கை பண்ணையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில்
அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்திய படி கோஷங்களை எழுப்பினர். மேலும் ஐஐடியே வெளியேற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















