மயிலாடுதுறை ரயிலடி ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் சீதா கல்யாணம்:- நலுங்கு, மாலை மாற்றுதல் உற்சவத்துடன் தொடங்கி நடைபெற்ற திருக்கல்யாணத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபாடு:-
மயிலாடுதுறை ரயிலடியில் பிரசித்தி பெற்ற ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு இன்று சீதா கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் ராமர்-சீதா உற்சவமூர்த்திகள் கோயிலின் அயோத்தியா மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பெண்களின் நலங்கு உற்சவமும் அதனைத் தொடர்ந்து மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது. மங்கள கௌரி பூஜை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீராமபிரான் சீதா திருமாங்கல்யம் அணிவிக்கும் சீதா கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி மூலவர் ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீதா கல்யாண வைபவத்தை கண்டு தரிசித்து வழிபாடு நடத்தினர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது.

















