முன்பதிவு மற்றும் பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கிடையே பிரச்சனையை ஏற்படுத்தி சண்டை போடும் சூழலை உருவாக்கும் ரயில்வே நிர்வாகம் – ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் ஏறிய மூதாட்டி – தன் குடும்பத்தினர் பாதிபேர் ரயிலில் சென்று விட்ட நிலையில், இடமில்லாததால் ரயிலில் ஏற முடியாமல் தவித்து கண்ணீருடன் கதறி அழுத குழந்தைகள் – விடுமுறை நாட்களிலாவது ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த கோரிக்கை – இல்லையென்றால் டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் கொடுக்க வேண்டாம் என ஆதங்கத்துடன் பேசிய ரயில் பயணிகள்…
தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், ரயில் மற்றும் பேருந்துகளில் பொதுமக்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதற்கேற்ற வகையில் விடுமுறை நாட்களில் கூடுதல் ரயில்களையோ அல்லது வழக்கமாக விடப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளையோ ஏற்படுத்தாமல் பயணிகளை வஞ்சித்து வருகிறது ரயில்வே நிர்வாகம்.
இது குறித்து பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு ரயில் பயணிகள் சங்கங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதனை கண்டும் காணாமல் உள்ளது ரயில்வே நிர்வாகம்.
வழக்கமாக பொங்கல் தீபாவளி பண்டிகைகள் நாளில் ஒரு சில ஊர்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. அந்த ரயிலிலும் கூட்டம் அதிகளவில் நிரம்பி காணப்படுகிறது.
இந்த நிலையில் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு தினமும் மாலை நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருக்கிறது.
பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் தினந்தோறும் இயக்கப்பட்டு வரும் இந்த ரயிலில் 16 முன்பதிவு பெட்டிகள் மற்றும் 5 பொது பெட்டிகள் உள்ளன.
மூன்று மாநிலங்கள் வழியாக இயக்கப்படும் ரயில் என்பதால் தினமும் இந்த ரயில் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பொதுப்பெட்டிகளில் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கை குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சாவூர் மற்றும் திருச்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயண சீட்டு எடுத்து காத்திருந்தபோது, 3.30 மணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டதால், 5மணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணிக்குமாறு அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
சாதாரண ரயில் டிக்கெட்டை விட எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிக அளவு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அந்த அதிக அளவிலான பணத்தை கொடுத்து காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய தயாராக இருந்தனர்.
காரைக்காலில் இருந்து கிளம்பிய காரைக்கால் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்கனவே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் மேலும் கூட்டம் ஏறியதால் கை குழந்தைகளுடன் பயணித்த பெண்கள் மற்றும் முதியவர்களை அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் அருகே இருந்த முன்பதிவு பெட்டிகளில் நின்று கொண்டு பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படியே திருவாரூர் வரை முன்பதிவு பெட்டிகளில் வந்துள்ளனர்.
இதனால் முன்பதிவு பெட்டிகளில் அதிகளவு பணம் கொடுத்து, டிக்கெட் எடுத்து பயணம் செய்த பயணிகள் அவதிக்குள்ளாகி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ரயில் திருவாரூர் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் ரயில்வே போலீசார் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த பொதுமக்களை அதிரடியாக கீழே இறக்கி மீண்டும் பொதுப் பெட்டிகளில் பயணிக்க அறிவுறுத்தினர்.
பொதுப்பெட்டிகளில் நின்று கொண்டு செல்லும் அளவுக்கு கூட இடம் இல்லாத காரணத்தினால் ஒரு சிலர் மட்டுமே பொதுப்பட்டிகளில் ஏறி உள்ளனர். அதற்குள் காரைக்கால் எர்ணாகுளம் விரைவு விரைவு ரயில் புறப்பட தயாரானதால் பரபரப்புடன் வேகமாக ஓடிவந்த மூதாட்டி ஒருவர் ஆபத்தான முறையில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் ஏறினார்.
இதேபோல வேளாங்கண்ணிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு பாதிப்பேர் ரயிலில் ஏறிய நிலையில் கை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் தவித்த பெண்கள் பலர் ரயிலில் ஏற முடியாமல் தவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், கூட்டம் அதிகமாக இருப்பது தெரிந்தால் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தி விடலாமே..? அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்..? என்றும் விடுமுறை காலங்களிலாவது கூடுதல் ரயில்களையோ அல்லது ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் என்ன என்ன..? ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து கண்ணீருடன் கைக்குழந்தைகளுடன் அடுத்த ரயிலுக்காக மாலை 07.30மணி வரை காத்திருந்து அந்த ரயிலில் புறப்பட்டு சென்றனர்
பேட்டி : கலையரசி – மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் ரயிலில் ஏற முடியாமல் தவித்த பெண்
FILENAME: TVR TRAIN PROBLEM NEWS.














