தேமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்: 100 நாள் வேலைத் திட்ட சம்பள பாக்கி குறித்து தீர்மானம்
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் தேமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மனோகரன், ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை வாசித்தார். தொடர்ந்து ஊராட்சியின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் கடந்த 5 வாரங்களாகப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சூழல் குறித்து விவாதிக்கப்பட்டு, பணத்தை உடனடியாக விடுவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், குடிநீர்க் கட்டணமாக ஒரு வீட்டிற்கு மாதம் ₹30 வீதம், ஆண்டிற்கு ₹360 வசூலிப்பது என ஒருமனதாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கிராமத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும் அனைவரும் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் ஒன்றியப் பொறியாளர் வெற்றி, அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், வருவாய்த் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.













