தேர்தல் ஆணையருக்கு எதிராக சிபிஐ, சிபிஐஎம், சிபிஐஎம்எல் உள்ளிட்ட இடதுசாரிகளின் ஆர்ப்பாட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு – போக்குவரத்து நெரிசல் – ஆர்ப்பாட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் – இடதுசாரிகளின் மாற்றத்தை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்ட மக்கள்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இணைந்து தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொதுமக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இடதுசாரி தோழர்கள் மாற்றியது திருவாரூர் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் என காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டு, தமிழ்நாடு காதிபவன் நிறுவனத்தின் வாசலில் சட்டவிரோதமாக ஷாமியான பந்தல் அமைத்து, சாலையை அடைத்து, அதில் நாற்காலிகள் போட்டு அமர்ந்து இடதுசாரி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழ்நாடு காதிபவன் நிறுவனத்துக்கு செல்லும் வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டனர். மேலும் அருகே உள்ள தனியார் துணிக்கடை மற்றும் தனியார் உணவகத்துக்கு செல்லும் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
இதனால் பழைய பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த இடதுசாரி தோழர்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்றதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக இருசக்கர வாகனங்கள் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் வேகமாக வந்த இளைஞர்கள் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஒருவர் கூட கலந்து கொள்ளாமல், இந்த ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுவதுமாக புறக்கணித்தது.
இவ்வாறு அறிவித்தது ஒன்றாகவும், நடைமுறையில் வேறொன்றாகவும் நடந்து கொண்ட இடதுசாரி தோழர்களை அவ்வழியாக சென்ற திருவாரூர் மக்கள் வசைப்பாடி சென்றனர்.
ஆர்ப்பாட்டம் என அனுமதி வாங்கிவிட்டு, காதிபவன் வாசலில் ஷாமியான பந்தல் அமைத்ததும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இடதுசாரி தோழர்களை காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்தனர்.
ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரே காரணத்திற்காக இடதுசாரி தோழர்களின் அராஜக போக்கை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது.
ஒரு காலத்தில் பொதுமக்களுக்கு பிரச்சனை என்றால் உடனடியாக களத்துக்கு வந்து போராடும் இடதுசாரி தோழர்கள், தற்போது பொதுமக்களுக்கே பிரச்சனை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது, இடதுசாரிகளின் மாற்றத்தை தெளிவாக மக்களுக்கு உணர்த்தியது.














