தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தும், அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் சி.பி.ஐ.(எம்), சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்.எல்)எல் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் எதிரே கிட்டப்பா அங்காடி முன்பாக மாநிலத் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாட்டின் ஜனநாயக உரிமை பெற்ற 100 கோடி வாக்காளர்களில், தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் 13.37 கோடி வாக்காளர்களை நீக்கம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையரின் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆர்ப்பாட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜனநாயக மாண்புகளைப் பாதுகாக்காமல், பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் மீது மத்திய அமைச்சகத் துறைகளை ஏவிவிட்டுப் பழிவாங்கும் மத்திய பா.ஜ.க. அரசின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தி வரும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இப்போராட்டத்திற்கு சி.பி.ஐ. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாசிலாமணி, சி.பி.ஐ.எம் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், அ.வி.தொ.ச. மாநிலப் பொதுச்செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் சீனிவாசன், சி.பி.ஐ.(எம்) மாநிலக்குழு உறுப்பினர் சிங்காரவேலன், சி.பி.ஐ.(எம்.எல்)எல் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

















