பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிதாக கட்டபட உள்ள கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தை திருவாரூர் மன்னார்குடி சாலையில் அமைத்திட வலியுறுத்தி நடைபெறும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு புதிதாக வட்டாட்சியர் அலுவலகம் கட்டடம் கட்டுவதற்காக பொது மக்களின் எந்தவித கருத்துக்களையும் கேட்காமல் கூத்தாநல்லூர் பகுதியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் நாகங்குடி கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கூத்தாநல்லூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை எனவும், எனவே இந்த நாகங்குடி கிராமத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் அரசின் முடிவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு பலனளிக்கும் வகையில் திருவாரூர் மன்னார்குடி சாலையில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்ட வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களுக்கு பயனளிக்காத அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 6வது நாளாக காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்றிரவு கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், மாற்று இடம் வழங்கிடக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி: பாலசுப்பிரமணியன் – போராட்ட ஒருங்கிணைப்பாளர்















