செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பரசலூரில் ராஜாராமன் என்பவர் நகைகடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நகைக்கடைக்கு நேற்று முன்தினம் ஒரு பெண், இரண்டு இளைஞர்கள் தங்களிடம் தங்கை நகை உள்ளது. புதையலில் கிடைத்த நகை குறைந்தவிலைக்கு தருகிறோம் வாங்கிகொள்ளுங்கள் என்று கூறி தங்களிடமிருந்த முத்துக்கள் போன்ற நகையின் ஒரு பகுதியை எடுத்து கொடுத்துள்ளனர். உண்மையான நகையா என்று சோதனை செய்தபோது தங்கம் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுபோன்று மோசடி நபர்கள் அதிக அளவில் வருவதால் சந்தேகமடைந்த நகை கடை உரிமையாளர் ராஜாராமன் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு நகைகள் எவ்வளவு இருந்தாலும் எடுத்துவாறுங்கள் வாங்கிகொள்கிறோம் என்று கூறியுள்ளார். அதனையடுத்து தனிப்படை காவல் உதவி ஆய்வாளர்கள் நரசிம்மபாரதி, செந்தில்குமார், தலைமை காவலர் கார்த்திக் மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மறைந்திருந்தனர். அப்போது நகைகளுடன் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கரன்(28), அர்ஜுன்(28), ராதா(43) என்பதும் போலி நகைகளை விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. உடன் தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்து செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து செம்பனார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கரன், அர்ஜுன், ராதா ஆகிய 3 பேரை கைது செய்து இதுபோன்று வேறு எங்கெல்லாம் ஏமாற்றி உள்ளார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 3 பேரையும் தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.















