மயிலாடுதுறையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான போட்டிகள் துவங்குவதற்கு முன் மைதானத்தில் காத்திருந்த வீரர்களை தனது நடனதால் உற்சாகப்படுத்திய சக விளையாடு வீரரின் செயல் அனைவரின் பாராட்டை பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் இன்று காலை முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக ஊழியர்கள் அணிக்கு இடையேயான மாநில அளவிலான கபடி, கைப்பந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் துவங்கியது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் விளையாடின. முன்னதாக விளையாட்டு மைதானத்தில் வெகு நேரம் காத்திருந்த வீரர்கள் சற்று சோர்வடைந்தனர். இந்நிலையில் அதே மைதானத்தின் அருகே மற்றொரு விழாவில் நாட்டுபுற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த நாட்டுப்புற இசைக்கு தக்கவாறு திருவண்ணாமலை நுகர்வோர் வாணிப கழக உதவியாளரும் விளையாட்டு வீரருமான ஆறுமுகம் என்பவர் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் துள்ளி குதித்து நடனமாடி சோர்வில் இருந்த அனைத்து விளையாட்டு வீரர்களையும் உற்சாகப்படுத்தினார். அவரது நடனத்தை சக விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த அனைவரும் கைத்தட்டி ரசித்து விசில் அடித்து அவரை உற்சாகப்படுத்தியதுடன் பாராட்டி மகிழ்ந்தனர்.















