சாமானியனின் ஒற்றை கேள்வி? மயிலாடுதுறை நகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீரால் 8 ஆண்டுகளாக தொடரும் சுகாதார சீர்கேடு. நடவடிக்கை எடுக்காத நகராட்சி, மற்றும் மக்கள் பிரதிநிதிகளை வறுத்தெடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் பேசும் வீடியோ வைரல்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் முக்கிய நகரமாக உள்ளது. இங்கு 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதாளசாக்கடை திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் பாதாளசாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு சரி செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. பல்வேறு இடங்களில் ஆள்நுழைவு தொட்டிகள் வழியாக கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி வருகிறது. நகராட்சி மழை நீர்வடிகால் மற்றும் வாய்கால்களில் கழிவுநீரை திறந்துவிடுவதாகவும் குற்றசாட்டு உள்ளது. இந்நிலையில் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த சமூகசேவகர் பாரதிமோகன் என்பவர் மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் பாதாளசாக்கடை கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதை வீடியோவாக பதிவிட்டு நகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை வறுத்தெடுத்துள்ளார். பல ஆண்டுகளாக மயிலாடுதுறை நகரில் பாதாளசாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காணப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் பாதாளசாக்கடை பிரச்சனை பேசுபொருளாகியும் அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்காத நிலையில், பாதாளசாக்கடை பிரச்சனை தமிழக அரசின் கவனம் பெற்று தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.













