சீர்காழியில் அடிதடி பிரச்சனை சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற பட்டதாரி இளைஞர் மீது கஞ்சா வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்களுடன் வந்து குடும்பத்தினர் புகார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், தனது மகன் அருண்ராஜ் என்பவரை அடிதடி பிரச்சனை குறித்து விசாரணைக்காக சீர்காழி போலீசார் அழைத்து சென்ற நிலையில் அவர் மீது மதுவிலக்கு போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தன் மகன் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ராஜேந்திரன் மற்றும் பொது மக்கள் 150 க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் பட்டதாரியான
தனது மகன் அருண்ராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு அருண் ராஜ் மீது ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 14.09.2026 அன்று தெருவில் ஏற்பட்ட ஒரு தகராறு தொடர்பாக, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அருண்ராஜை சீர்காழி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அன்று மாலையில் சீர்காழி நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது தான், அவர் மீது சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) சார்பில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அருண்ராஜை வீட்டிற்கு வந்து போலீசார் பிடித்துச் சென்ற நிலையில், மாலையில் வேறொரு இடத்தில் வைத்து 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக மதுவிலக்கு போலீசார் போலி ஆவணங்களைத் தயாரித்து பொய் வழக்குப் போட்டுள்ளனர். இதனால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தங்கள் குடும்பத்தினர் கௌரவத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்பதால்
மகன் மீது பொய்யாக பதியப்பட்ட கஞ்சா வழக்கை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் எனவும், அதிகார துஷ்பிரயோகம் செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் ராஜேந்திரன் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் சீர்காழியில் 14ஆம் தேதி அன்று சாலை மறியல் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.













