நாகை அருகே தலையான்மலை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: மூன்று மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் வராததால் கொளுத்தும் வெயிலை பொறுப்பெடுத்தாமலும் சாலையில் அமர்ந்து போராட்டம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலையான்மழை கிராமத்தில் அடிப்படை வசதியான குடிநீர் கேட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலையான்மழை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் வீடுகள்தோறும் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டும், கடந்த 6 மாதங்களாக ஒரு சொட்டு குடிநீர் கூட விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே டேங்கர் லாரி மூலம் வழங்கப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடிநீருக்காக சுமார் 5 கிலோமீட்டர் தூரமுள்ள சோழவித்தியாபுரம் கிராமத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டுமே சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், வெளி ஊர்களுக்குச் சென்று தண்ணீர் பிடிப்பதால் கிராமங்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் இன்றி பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராமத்துப் பெண்கள், நாகப்பட்டினம் – மேலப்பிடாகை சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலி குடங்களை தலையில் சுமந்தவாறு சாலையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக வராததால், பெண்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலையான்மழை கிராம மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













