கூத்தாநல்லூர் அருகே ஒரே நாள்… ஒரே நேரத்தில் 9 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் டிரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் சிவபெருமான் மேற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து சிறப்பாகும். மேலும் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் செங்கழுநீர் விநாயகர், வெட்டுக்கு விநாயகர், வலம்புரி விநாயகர், ஸ்ரீ மகா காளியம்மன், பிடாரியம்மன் மற்றும் பூர்ண புஷ்களாம்பிகா சமேத ஹரிஹர புத்திர அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த 9 ஆலயங்களிலும் மகா கும்பாபிஷேகம் நடத்த கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் முழங்க புனித கடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஆலயத்தைச் சுற்றி வலம் வந்த சிவாச்சாரியார்கள், விமான கோபுரங்களை வந்தடைந்தனர். தொடர்ந்து காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை, விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளின் விமான கோபுரங்களுக்கு புனித கடங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில் ஒரே நேரத்தில் 9 கோவில்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம், சாத்தனூர் கிராமத்தில் பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.

















