சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா அகணி மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டியன்ராஜ் மகன் தோனி பிளேயர் (வயது 26), இவரது நண்பர் துறையூர் கோவிந்தபுரம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் சுபாஷ் (24). இவர்கள் இருவரும் சேரந்து கடந்த 12.08.2026-ம் தேதி திருவெண்காடு அருகே சித்தன்காத்திருப்பு பஸ் நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த தினகரன்(40) என்பவரை வழிமறித்து முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திருவெண்காடு போலீசார், தோனி பிளேயர் மற்றும் சுபாஷ் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்தநிலையில் தோனி பிளேயர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொள்வதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், தோனி பிளேயரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுப்படி திருவெண்காடு போலீசார் தோனி பிளேயரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

















