மன்னார்குடியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரெளபதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரெளபதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மன்னார்குடி ஆசாத் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் திருக்கோவில் திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மகாகும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. இதையடுத்து கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மூன்று நாட்கள் தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான இன்று, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர், சிவாச்சாரியார்களால் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.பின்னர் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவரான திரெளபதி அம்மன், விநாயகர், முருகப்பெருமான், ஸ்ரீ அரவான், ஸ்ரீ கமலக்கண்ணி, ஸ்ரீ காட்டேரி அம்மன், தர்மராஜா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மகாகும்பாபிஷேக விழாவில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

















