திருவொற்றியூர் கண்ணபிரான் கோவிலில் வாட்டர்மேலன் ஸ்டார் சிறப்பு தரிசனம்
பஜனையில் கலந்து கொண்டு பாடல்கள் பாடி பக்தர்களை நெகிழ வைத்தார்
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் அமைந்துள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கண்ணபிரான் சுவாமி திருக்கோவிலில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வாட்டர்மேலன் ஸ்டார், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
தொடர்ந்து, நெற்றியில் நாமம் அணிந்து, காதில் பூ வைத்து, பக்தர்களுடன் இணைந்து பஜனையில் கலந்து கொண்டார். மேலும் பஜனைப் பாடல்களை பாடி பக்தர்களை நெகிழச் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்த பள்ளி குழந்தைகளுடன் அன்புடன் கலந்துரையாடிய அவர், மாணவ, மாணவிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். குழந்தைகளும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வாட்டர்மேலன் ஸ்டார்,
“நூறாண்டுகள் பழமை வாய்ந்த திருவொற்றியூர் கண்ணபிரான் சுவாமியை பார்த்தால், அயோத்தியில் உள்ள ராமரைப் பார்ப்பது போலவே இருக்கிறது. அதற்காக அயோத்திக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை; இங்கேயே வந்து கண்ணபிரான் சுவாமியை தரிசனம் செய்து கொள்ளலாம்” என்று ஆன்மிக உணர்வுடன் தெரிவித்தார்.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பகவத் கீதையின் கருத்துகளை பெற்றோர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும், பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள நல்ல கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் வாட்டர்மேலன் ஸ்டாருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
பக்தியுடன் பஜனையில் கலந்து கொண்டு, குழந்தைகளுடன் அன்பாக பழகி, ஆன்மிக கருத்துகளை பகிர்ந்து கொண்ட வாட்டர்மேலன் ஸ்டாரின் இந்த நிகழ்வு, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

















