மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்து கஞ்சா மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ஆகாஷ் என்கிற மணிகண்டன் (வயது 23) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.மேலும், கடந்த 02.08.2026-ம் தேதி மணல்மேடு அருகே சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பூதங்குடி ஆண்டவர் நகரைச் சேர்ந்த செல்வமணி மகன் சிவா (எ) தொப்பி சிவா (29) என்பவரை மணல்மேடு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் மணிகண்டன், சிவா ஆகிய 2 மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி 2 பேரையும் போலீசார் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.














