குற்ற சம்பவங்கள் மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஐந்து நபர்களுக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பேர் என்று மொத்தம் 5 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.மயிலாடுதுறை போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான முத்துபாண்டி (26), அம்மாயி (எ) பாரதி (29), ரஞ்சித் (30), ஆகியோர் கடந்த 20.07.2026-ந் தேதி மயிலாடுதுறை பகுதியில் கையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் பொது மக்களை அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அன்றைய தினம் ரோந்து பணியில் இருந்த போலீசார் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் செம்பனார்கோவில் போலீஸ் சரகம், கீழையூர் சத்திரம் பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த அஸ்ரப் அலி (50) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதேபோல கடந்த 31.07.2026ம் தேதி பொறையார் போலீஸ் சரகம், ஆத்துபாக்கம் அருகில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட திருக்களாச்சேரி மதன் கார்க்கி (42) என்பவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் தொடர்ந்து குற்ற வழக்குகளிலும், கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபட்டுவந்த 5 பேர் மீதும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், குற்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட 5 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி 5 பேரையும் போலீசார் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனர்.















