மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா:- ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாட்டில் பழைமைவாய்ந்த கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான புற்றுடன் கூடிய நாகதோஷம் நீக்கும் கோயிலாக விளங்கிவரும் இக்கோயிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் பத்தாம் நாள் திருவிழாவான தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் உற்சவ மூர்த்திகள் கோபுர வாசலுக்கு சர்வ அலங்காரத்தில் எடுத்துவரப்பட்டார். தொடர்ந்து, காப்புக்கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்து, கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இதனையடுத்து சக்தி கரகம், மேளதாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.













