மயிலாடுதுறை அருகே உள்ள மேலமருதாந்தநல்லூர் கிராமத்தில் “6அரை அடி” உயரமுள்ள ஸ்ரீ அஷ்ட தசபுஜ மகாலெட்சுமி துர்கா பரமேஸ்வரி கோயிலில் 8 ஆம் ஆண்டு ஆடி மாத பால்குட திருவிழா;- பால்குடம் எடுத்த பக்தர்கள் அருள் வந்து ஆடியது அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மேலமருதாந்தநல்லூர் கிராமத்தில் “6 அரை” அடி உயரமுள்ள அஷ்ட தசபுஜ மகாலெட்சுமி துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 8 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக இக்கோயிலில் இருந்து புஷ்ப அலங்காரம் சிறப்பு பூஜைகளுடன் சக்தி கரகம் ஊர்வலமாக புறப்பட்டது. மஞ்சள் உடை அணிந்து, காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், காவடி எடுத்தும் பம்பை, மேள வாத்தியங்கள் முழங்க சக்திகரகத்துடன் ஊரின் நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக சுற்றி வலம் வந்து கோயிலை அடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஊர்வலத்தில் இரு சிறுமிகள் மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரி அம்மன் வேடமணிந்து கலந்து கொண்டது பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து வீடுகள் தோறும் கிராம மக்கள் மாவிளக்கு ஏற்றி, தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர். அப்போது பால்குடம் எடுத்துச் சென்ற சில பக்தர்கள் அருள் வந்து ஆடியது, அங்கு திரண்டிருந்த பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்பு அம்மனை தரிசித்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.















