சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சிபெறும் பெண்களுக்கு பயிற்சிப்பள்ளி உரிமையாளர் பாலியல் தொல்லை அளிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர்க்கூட்டத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு எதிராக திரண்டு வந்த வர்த்தக சங்க நிர்வாகிகள்:- பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் என பலரை பணம் கொடுத்து அழைத்து வந்ததாக, அப்பெண்களுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நடத்திவரும் பாலமுருகன் என்பவர் அங்கு பயிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவதுடன், பல பெண்களை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் மோகன் என்பவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் மற்றும் 30-க்கு மேற்பட்ட பெண்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்துக்கு வந்து, அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர் என மாவட்ட ஆட்சியரிடம் அறிமுகப்படுத்தி, பயிற்சிப்பள்ளி பாலமுருகன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாலமுருகனுக்கு ஆதரவாக சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் சுடர் கல்யாணசுந்தரம் தலைமையில் 50-க்கு மேற்பட்ட வர்த்தகர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பாலமுருகன் மீது சுமத்தப்பட்டுள்ளது பொய் குற்றச்சாட்டு என தெரிவித்து வலியுறுத்தினர்.
இதுகுறித்து, குற்றஞ்சாட்டப்பட்ட பாலமுருகன் கூறுகையில், சீர்காழியில் மனைப்பிரிவுகள் போடும் கோயில் இடத்தை ஏழை மக்களுக்கு பிரித்து வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அந்த மனைப்பிரிவு நிறுவனத்தை நடத்திவரும் மார்க்கோனி என்பவர் தன்னை மிரட்டும் விதமாக இத்தகைய அவதூறுகளை பரப்புவதாக தெரிவித்தார். சீர்காழி நகர வர்த்தக சங்க தலைவர் சுடர் கல்யாணசுந்தரம் கூறுகையில், சங்கத்தின் உதவி தலைவர் பாலமுருகன் மீது முன்விரோதம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் பொய்யான புகார் மனு அளித்துள்ளனர். இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக சங்கங்களும் இணைந்து கடையடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார். மேலும், நேற்றைக்கு மனு அளிப்பதற்காக வந்த பெண்கள் தங்களை சீர்காழி நகரத்தில் உள்ள குப்பை, சாக்கடை பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காகவே தங்களுக்கு ரூ.500 கொடுத்து அழைத்து வந்ததாக தெரிவித்தனர்.














