மயிலாடுதுறையில் இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு. கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து உருவ பொம்மையை எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்:-
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பாடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கமிட்டனர். தொடர்ந்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணியை ஊற்றி அணைக்க முற்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்தனர். அதில் ஒருவரை பிடித்த காவல் ஆய்வாளர் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து தனது வாகனத்தில் ஏற்றிய போது எதிர்ப்பு தெரிவித்து அவரை விடுவித்த போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள் என்று கூறியதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர்.














