பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அகனியில் , தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் கில்லி கமல் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், மாவட்டச் செயலாளர் கோபிநாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நடப்பாண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு, மாவட்டச் செயலாளர் கோபிநாத் கல்வி உதவித்தொகைகளை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
மேலும், இந்நிகழ்வின் அதிமுக,திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், மாவட்டச் செயலாளர் கோபிநாத் முன்னிலையில் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்குச் சால்வை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் விழாவில் பேசிய மாவட்டச் செயலாளர் கோபிநாத், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த 60 ஆண்டுகளாக மாநிலத்தை ஆண்டவர்கள், மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டுத் தங்கள் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தற்போது நடைபெறும் இந்தக் கூட்டம் ஊழலால் உருவானதல்ல, மக்களின் உண்மையான உணர்வால் உருவானது எனத் தெரிவித்த கோபிநாத், வரவிருக்கும் காலங்களில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு சிறப்பான ஆட்சியைத் தொடர மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனத் தனது உரையில் வலியுறுத்தினார்.















