உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனை வரவேற்கும் விதமாக கல்லூரி நிர்வாகத்தினரின் எதிர்ப்பை மீறி கல்லூரி வளாகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி கொடிகளை கட்டிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளால் மாணவர்கள் அவதி – விரிசல் அடைந்த பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து சென்ற உயர்கல்வித்துறை அமைச்சரால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம்..
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான விசுவநாதன் இன்று திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டங்கள் மற்றும் பொது விநியோக கட்டிடங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
நன்னிலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூபாய் 245 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட ஆறு வகுப்பறைகளை திறந்து வைப்பதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக கல்லூரி வளாகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் கொடியினை கட்டி வைத்திருந்தனர்.
கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சியின் கொடிகளை கட்ட வேண்டாம் என கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், கல்லூரி நிர்வாகிகளின் எதிர்ப்பினை கண்டு கொள்ளாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கல்லூரி வளாகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி கொடிகளை கட்டி வைத்திருந்தனர். மேலும் கல்லூரி வளாகத்தில் அமைச்சரை வரவேற்பதற்காக கட்சி நிர்வாகிகள் பேனர்களை வைத்திருந்தனர். இதனால் இது கல்லூரி வளாகமா..? அல்லது அரசியல் கட்சி நடத்தும் நிகழ்வா..? என மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 141 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருடன் இணைந்து குத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து அடுத்த நிகழ்ச்சிக்கு கிளம்பி சென்றார்.
பள்ளி மாணவர்களுக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை கூட ஆய்வு செய்யாமல், உடனடியாக அமைச்சர் அங்கிருந்து கிளம்பி சென்றார். ரூபாய் 141.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்களில் பெரும்பாலான பகுதிகளில் விரிசல் விழுந்தும், பள்ளி வகுப்பறைகளில் டைல்ஸ்கள் முறையாக இல்லாமல் ஓட்டை உடைசலுமாக இருக்கின்றன.
மேலும் ஜன்னல் கம்பிகள் முறையாக சிமெண்ட் கொண்டு பூசாமல் ஆங்காங்கே ஓட்டை உடைசலுமாக இருக்கின்றன. மாடி படிக்கட்டுகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகளில் உள்ள மின்விசிறிகள் மற்றும் ஒளி விளக்குகள் ஆகியவற்ற இயக்குவதற்காக உள்ள ஸ்விட்ச் போர்டு கீழே சுவர் விரிசல் அடைந்து காணப்படுகிறது. இதனால் எந்த நேரத்தில் மின்சாரம் தாக்குமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.
மாணவர்களுக்காக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை கூட ஆய்வு செய்யாமல் அமைச்சர் விஸ்வநாதன் உடனடியாக அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்து கலந்து கொள்வதிலேயே ஆர்வமாக இருந்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நாளொன்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டதால் பெயரளவுக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் திறந்து வைத்தால் மட்டும் போதும் என அமைச்சர் நினைத்து விட்டாரா என திருவாரூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.












