தமிழக அரசு முழுமையாக பயிர் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் நடைபெற வேண்டிய மாதாந்திர விவசாயக் குறைதீர் கூட்டம் சென்ற மாதம் நடைபெறவில்லை. இதன் காரணமாக இன்று ஜூன் மாதத்திற்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கு விவசாயிகளால் நிரம்பி வழிந்தது. முன்னதாக தமிழக அரசு விவசாய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் ஒன்று கூடி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது














