கந்திலி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் – தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே கந்திலி உள் வட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
சுமார் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 2024–25 ஆம் ஆண்டிற்காக கட்டப்பட்ட இந்த புதிய கட்டிடம் பொதுமக்களுக்கு சேவையை மேலும் எளிதாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி. ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் ஒன்றிய செயலாளர் குணசேகரன். எஸ் கே டி அசோக் குமார் கந்திலி ஊராட்சி தலைவர் பிரபு. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
மேலும் தொடர்ந்து வருவாய் ஆய்வாளரை புதிய அலுவலக அறையில் அவர்களின் இருக்கையில் அமர வைத்து பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சி முடிவில் மாவட்ட ஆட்சியர் வெளியேறியபோது, அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் வராததால் கடும் சிரமம் அனுபவித்து வருவதாக மனு அளித்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்
அதே நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தனது சொத்து அபகரிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு அந்த இடத்தில் வீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதற்கு மாவட்ட ஆட்சியர், உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு அனைத்தும் சரியாக இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்; தவறுகள் இருந்தால் வழங்க முடியாது என தெரிவித்தார்.
இதையடுத்து,
“அனைத்தும் சரியாக இருந்தால் மட்டும் எங்களுக்கு வழங்குங்கள்” என கூறி அந்த மாற்றுத்திறனாளி நபர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து மனு அளித்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.














