சினிமாவை விட்டு முழுமையாக அரசியல் பாதையில் அடியெடுத்துள்ள நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசித் திரைப்படம் ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம், ஜனவரி 9ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சென்சார் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 9 என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழுக்காக கடந்த டிசம்பர் 19ஆம் தேதியே படத்தை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படாதது திரையுலகில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிபி சத்யராஜ், இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் முதல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வரை பலர் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகர் ஜீவாவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு விஷயத்திற்கான காத்திருப்பு அதிகமானால்தான் அதன் தாக்கம் இன்னும் பெரிதாகும். எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் விஜய் அண்ணா. நீங்கள் உண்மையிலேயே ஜனங்களின் நாயகன். தாமதமாக வந்தாலும், நாங்கள் தோல்வியடைந்தவர்கள் அல்ல” என தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்று ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் படக்குழுவும், ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

















