மயிலாடுதுறையில் காவிரியின் கிளை வாய்க்காலான பழங்காவிரி வாய்க்கால் பொதுப்பணித்துறை மூலம் ரூ.37 கோடியில் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், எம்எல்ஏ ராஜகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு:-
மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களான பழங்காவிரி, பட்டமங்கலம் வாய்க்கால், மொழையூர் வாய்க்கால் மற்றும் பூவேந்திரன் வாய்க்கால் ஆகியன நகர பகுதியில் உள்ள குளம், குட்டை ஆகிய நீர்நிலைகளுக்கு நீராதாரம் தரும் முக்கிய நீர்வழிப்பாதையாக உள்ளன. இந்த வாய்க்கால்கள் பராமரிப்பின்மை காரணமாகவும், நகராட்சி பாதாளசாக்கடை கழிவுநீரை திறந்து விடுவதன் காரணமாகவும், பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதன் காரணமாகவும், நீர்வழிப்பாதை தடைபட்டுள்ளதுடன், பல இடங்களில் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. நகர பகுதியில் சுமார் 21 கி.மீட்டர் செல்லும் இந்த வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் ஏற்படுத்தி சீரமைக்க வேண்டும் என அரசு முதன்மை செயலருக்கு மயிலாடுதுறை எம்எல்ஏ ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், பழங்காவிரியை மீண்டும் புனரமைத்து, நிரந்தர தீர்வு ஏற்படுத்த நீர்வளத்துறை அனுமதி பெற்று ரூ.37 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பழங்காவிரி வாய்க்காலில் எம்எல்ஏ ராஜகுமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, நகராட்சி தலைவர் செல்வராஜ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கண்ணதாசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
















