இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு முதல் மதநம்பிக்கை வரை பல முக்கியமான விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படும் வகையில் வைரலாகியுள்ளது.
AI குறித்து ரஹ்மானின் எச்சரிக்கை
AI பயன்பாடு குறித்து அவர் கருத்து தெரிவிக்கும்போது, “மக்கள் வேலை இழக்கக் கூடாது. தலைமுறைகளாக நீடித்து வரும் ஏழ்மையை போக்கவும், தவறான தகவல்களை சரிசெய்யவும், கதை சொல்ல புது கருவிகளை உருவாக்கவும் AI உதவ வேண்டும். மனித அனுபவத்தை AI மாற்ற முடியாது” என்று தெளிவாக தெரிவித்துள்ளார். லைவ் கச்சேரி, லைவ் டான்ஸ், சிம்பொனி போன்றவை மனிதர்களுக்கு சமூக அனுபவத்தை வழங்குவதால் அவை எப்போதும் தனித்த இடம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியர்களின் செல்ஃபி கலாசாரம்
வெளியில் செல்லும் போது ரசிகர்கள் செல்ஃபி எடுப்பது குறித்து பேசும் ரஹ்மான், “விமானப் பயணத்துக்குப் பிறகு களைப்பாக இருக்கும் நேரத்தில் செல்ஃபி கேட்பது சிரமம். திருமணங்களுக்கு சென்றால் கூட சாப்பிட கூட நேரமில்லை; எல்லோரும் புகைப்படம் கேட்கிறார்கள்” என்று சொன்னார்.
மேலும், ஹாலிவுட்டில் நட்சத்திரங்கள் ‘புகைப்படம் எடுக்க மாட்டேன்’ என்று நேராகச் சொல்வார்கள்; ஆனால் இந்தியர்களின் கனிவு காரணமாக இங்கு அதைச் சொல்ல முடியாது என்றும் அவர் சிரித்தபடி கூறினார்.
மதம், ஆன்மீகம், சூஃபியிஸம்
மதத்தைப் பற்றிய தனது பார்வையை பகிர்ந்த ரஹ்மான்,
“மதத்தின் பெயரால் ஒருவரை துன்புறுத்துவது அல்லது கொல்வது தான் என் பிரச்னை. மதம் என்பது மனிதனை உயர்வாக சிந்திக்கச் செய்யும் கருவி” என்று வலியுறுத்தினார்.
இசை ஏன் தன்னை இழுத்துச் செல்கிறது என்ற கேள்விக்கு, “இசை ஒரு புனித தளம். பல மதங்கள், மொழிகள், விசுவாசங்கள் கொண்ட மக்கள் ஒரு மகிழ்ச்சியில் கலக்கிறார்கள். சத்தமும் மௌனமும் இணையும் அந்த தருணம் தெய்வீகமானது” என்று ரஹ்மான் கூறினார்.
















