கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, காயமடைந்த 4 பேரிடம் இன்று மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) விசாரணை நடத்தியது.
செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில், நடிகர் விஜய் பங்கேற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து, கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.
பின்னர், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட நான்கு பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின் மாநில அரசு பரிந்துரையின்பேரில், வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. ஆனால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என கோரி தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் பின்னர் சிபிஐ அதிகாரிகள் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், வீடியோ கிராபர்கள், வியாபாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை தொடங்கினர்.
அக்டோபர் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், நெரிசலில் காயமடைந்தவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேரிடம் விசாரணை நடந்துள்ள நிலையில், இன்று மேலும் 4 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
அவர்களிடம் நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம், கூட்டத்தின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

















