சென்னை:
இசையமைப்பாளர் சபேஷ் உடல்நலக்குறைவால் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காலமானார். 68 வயதில் மரணமடைந்த அவர், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார். அவரின் நினைவாக, சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை சபேசனின் உருவப்படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் தேவா, கங்கை அமரன், சேரன், எஸ்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தம்பியின் நினைவுகளை பகிர்ந்த இசையமைப்பாளர் தேவா உருகி பேசியபோது, “சபேசன் சிறுவயதிலிருந்தே அமைதியாக இருப்பான். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை வெளியில் சொல்லமாட்டான். அவன் 68 வயது வரை நான் அவனுடன் பேசியது ஒரு மணி நேரம் தான் இருக்கும். கடைசி நேரத்திலும் உடல் வலியைப் பற்றிக் கூறவில்லை, சொல்லாமலே சென்றுவிட்டான்,” என்றார்.
தொடர்ந்து அவர் உணர்ச்சிவசப்பட்டு, “எனக்கு சபேசனும் முரளியும் இரண்டு இறக்கைகள் மாதிரி. இப்போது ஒரு இறக்கை விழுந்துவிட்டது. இன்னும் அவன் வளசரவாக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறான் போலத்தான் எனக்கு தோன்றுகிறது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “எங்கள் குடும்பத்தில் முதல் கச்சேரிக்குச் சென்றது சபேசன்தான். அதன் பிறகு தான் நாங்கள் சென்றோம். முதலில் வெளிநாடு சென்றதும், ஸ்கூட்டர் வாங்கியதும், கார் வாங்கியதும், டிவி வாங்கியதும், சொந்த வீடு கட்டியதும் அவன்தான். எல்லாவற்றிலும் அவன்தான் முதல் ஆள்; இறப்பிலும் அதேபோல் போய்விட்டான்.”
தம்பி மீதான பாசத்துடன் தேவா கூறியதாவது, “ஒரு வாரம் முன்பும் அவன் கச்சேரி வேலைகளில் ஈடுபட்டு இருந்தான். ‘உன் உடம்பு தாங்காது, ஓய்வெடு’ என்று நான் சொன்னேன். ஆனால் அவன் கேட்கவில்லை. 15 ஆண்டுகளாக காலை முதல் இரவு வரை ஒரே ஸ்டுடியோவில் சேர்ந்து வேலை செய்தோம். அவன் இல்லாமல் நான் இல்லை; சபேசன் தான் எனக்கு சினிமா உலகத்தை காட்டியவன். அவன் நினைவு என்றென்றும் மனதில் இருக்கும். அவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்,” என தேவா உருகி பேசினார்.


















