மதுரை : நடிகர்-இயக்குனர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி மதுரையில் நேற்று மாலை ப்ரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய தனுஷ், தனது குடும்பத்தினரின் போராட்டங்களை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசியார். “கிட்டத்தட்ட 8–9 வருடங்களுக்கு பிறகு மதுரைக்கு வந்துள்ளேன். இந்த ஊர் எனக்கு மிக நெருக்கமானது. என் அம்மா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தபோது, பஸ்ஸுக்கே பணம் இல்லாமல், என் அப்பாவுடன் சேர்ந்து 130 கிலோமீட்டர் நடந்தே மதுரைக்கு வந்தார்கள். அந்த மேடையில்தான் இன்று நானும் நிற்கிறேன். உழைப்பால் முன்னேறலாம் என்பதற்கான உதாரணம் என் அப்பாவே” என்றார்.
அதே நேரத்தில், ஆடுகளம் படப்பிடிப்பின் நினைவுகளையும் அவர் பகிர்ந்தார். “300 நாட்கள் மதுரையில் தங்கி படப்பிடிப்பு செய்தேன். எந்தத் தெருவும் எனக்கு புதிதாக இல்லை. அப்போது யாரும் அடையாளம் காணாமல், மக்களுடன் கலந்து பழகிய அனுபவம் மறக்க முடியாதது. ஆடுகளம் வெளியான நாளில் மதுரையிலேயே FDFS பார்த்தேன்” என நினைவுகளை பகிர்ந்தார்.
“இட்லி கடை” குறித்து அவர் கூறுகையில், “எளிமையான, குடும்பம் ரசிக்கும் வகையிலான படம் இது. எனக்குடன் நடித்த அனைவருக்கும் நன்றி. அருண்விஜய், பார்த்திபன், இளவரசு உள்ளிட்டோர் படத்தில் முக்கியமாக நடித்துள்ளனர்” என்றார்.
மேலும் ரசிகர்கள் எழுப்பிய கோரிக்கைக்கு பதிலளித்த தனுஷ், வடசென்னை 2 அடுத்த ஆண்டில் படப்பிடிப்பைத் தொடங்க, 2027ல் வெளியீடு செய்யப்படும் என அறிவித்தார்.