கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டது. இருமாநில பாரம்பரிய நிகழ்ச்சி என்பதால் தமிழக கேரளா காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்தி மரியாதை கொடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வது மரபு.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 22 -ந் தேதி முதல் 30 வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி இன்று சுசீந்திரத்தில் நடந்தது.இதையொட்டி முன்னுதித்த நங்கை அம்மனுக்கு தினமும் நடைபெறும் நித்தியகாரிய பூஜைகள் முடிந்த பிறகு தட்டு வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கோவிலில் இருந்து சாமி சிலைகள் வெளியே வரும்போது தமிழக, கேரளா போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு பக்தர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நான்கு ரத வீதிகளிலும் அம்மன் வீதி உலா வந்து ஊர்வலமாக புறப்பட்டது. இதனை காண ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். நாளை பாரம்பரிய முறைப்படி உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி
பத்மனாபபுரம் அரண்மனையில் நடக்கிறது. அதை தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி விழாவில் பங்கேற்க போலீசாரின் பாதுகாப்புடன் பல்லக்கு வாகனங்களில் புறப்பட்டு செல்கிறது.
















