ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி அளிக்க இந்தியா தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல தடைகள் விதித்துள்ளது. பதிலுக்கு பாகிஸ்தானும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் இருநாட்டு எல்லை பகுதிகளில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மீதான விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது. இனி பாகிஸ்தானுடன் எப்போதும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என பல்வேறு தரப்புகளில் வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதை அடுத்து, இனி இருநாட்டு தொடர்கள் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில், “பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் முற்றாக முறிக்க வேண்டும்” என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த அவர், “100 சதவீதம் பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பயங்கரவாத நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது நகைச்சுவை அல்ல. பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றத்தினால், இந்த அணிகள் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே இருந்துவருகிறது.