நேபாளத்தில் வன்முறைகள் வெடித்து, அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை நிலையற்ற நிலையில் இருப்பதால், இந்தியர்கள் யாரும் அங்கு பயணம் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்தும் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவையெனில் பாதுகாப்பான இடங்களுக்கு நகரவும், உதவி தேவைப்படுவோர் இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தூதரகம் சிறப்பு உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது.
மேலும், காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், இந்தியா-நேபாளம் இடையேயான ஏர் இண்டியா, இண்டிகோ, நேபாள ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து, நேபாளத்தில் நிகழும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்தார். “அங்கு பல இளைஞர்கள் உயிரிழந்தது நெஞ்சை உலுக்கும் சம்பவம். நேபாளத்தில் நிலைத்தன்மை, அமைதி மற்றும் வளம் ஏற்படுவது நமக்கு மிக முக்கியம். அங்கு உள்ள நமது சகோதர, சகோதரிகள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என்று மோடி தெரிவித்துள்ளார்.