தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) அணியுடன் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரராக அல்லாமல், அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பதவியில் அவர் திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடர் 2008-ல் துவங்கியபோது, டெல்லி அணிக்காக முதல் மூன்று சீசன்களில் விளையாடிய டிவில்லியர்ஸ், 2011-ஆம் ஆண்டிலிருந்து ஆர்.சி.பி அணியில் இணைந்தார். அந்த அணிக்காக மொத்தம் 157 போட்டிகளில் களமிறங்கிய அவர், 4522 ரன்கள் குவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டில் அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றாலும், ஆர்.சி.பி அணியுடன் அவரது உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. அணியின் முன்னேற்றம் குறித்து அவர் அடிக்கடி கருத்து தெரிவித்து, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், வரும் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மீண்டும் ஆர்.சி.பி அணியுடன் இணைய ஏ.பி. டிவில்லியர்ஸ் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.













