நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் 5 வயது சிறுவன் ஒருவன் ரம்புட்டான் பழம் சாப்பிடும்போது அதன் விதை தொண்டையில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்த ஷேக் பரீத் என்பவரின் மகன் ரியாஸ் (5). ஷேக் பரீத் தற்போது அரேபிய நாட்டில் வேலை செய்து வருவதால், தனது மகனை தந்தையிடம் விட்டு சென்றிருந்தார்.
நேற்று மாலை தாத்தா மற்றும் பேரன் கடைத்தெருவுக்கு சென்றபோது, ரியாஸ் ரம்புட்டான் பழம் கேட்டதால் தாத்தா அது வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் பழத்தை சாப்பிடும் போது, அதன் விதை தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் குழந்தை திடீரென மூச்சுத்திணறலால் கீழே விழுந்து திணறியுள்ளார்.
உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ரம்புட்டான் விதை மூச்சுக்குழாயில் சிக்கியதாலேயே இந்த துயரமான முடிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தவிர, குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால், சட்ட ரீதியாக பிரச்சனை ஏதுமில்லையெனவும், உடற்கூறு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர் எச்சரிக்கை:
ரம்புட்டான் பழம் சத்துகள் நிறைந்ததாக இருப்பினும், அதன் விதையில் saponin, tannin போன்ற நச்சு தன்மை வாய்ந்த மூலக்கூறுகள் இருப்பது சமீபத்திய மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் இந்த விதையை தவறுதலாக விழுங்கும்போது, அது மூச்சுத் தளர்வுக்கு காரணமாகி உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், ரம்புட்டான் பழம் மிகவும் பழுத்துவிட்ட நிலையில் அதிக fructose மற்றும் glucose அடங்கியிருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனைப் பிறகே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.













