ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 இளம் பெண்கள் புகார் !

திருச்சூரில் பிறந்த வேடன், தமிழ்–மலையாள மொழிகளை இணைத்து பாடும் ராப் பாடல்கள் மூலம் பிரபலமானவர். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவரது பாடல்கள் பேசப்பட்டன. 2020ல் வெளியான வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் ஆல்பம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2021ல் மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் பாடகராக அறிமுகமானார். தற்போது இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய தமிழ்ப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் ஒரு இளம் பெண் மருத்துவர், “2021 முதல் 2023 வரை திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பாலியல் உறவு கொண்டார்” எனக் குற்றம்சாட்டி, எர்ணாகுளம் தீர்க்ககரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பி.என்.எஸ் சட்டப்பிரிவு 376ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வேடன் தலைமறைவாக உள்ளார்.

தற்போது, அவருக்கு எதிராக மேலும் இரண்டு இளம் பெண்கள் கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் புதிய புகார்கள் அளித்துள்ளனர். இருவரும்  பி.ஹெச்டி படித்து வருவோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருபெண், “2020ல் ஆதிவாசி மக்களின் பிரச்சனை குறித்து உதவி கேட்டபோது வேடனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் எர்ணாகுளம் குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று முதல் சந்திப்பிலேயே பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மற்றொரு பெண் தனது புகாரில், “நான் சங்கீத கலைஞர். அதனால் பழக்கம் ஏற்பட்ட வேடன், 2021ல் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்” எனக் கூறியுள்ளார்.

இரண்டு புகார்களும் முதல்வர் அலுவலகத்திலிருந்து மாநில காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் விரைவில் விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version