பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேரன், பிறந்து வெறும் 17 மாதங்களிலேயே ரூ.3.3 கோடி டிவிடெண்ட் வருமானத்தை சம்பாதித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் தொழில்துறையில் முக்கிய இடம் பிடித்துள்ள இன்போசிஸ் நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு மாபெரும் வருமானத்தை உருவாக்கி வருகிறது. இதன் நேரடி உதாரணமாகவே, ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி எனும் சிறுவர் திகழ்கிறார்.
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகனான ரோஹன் மூர்த்தி மற்றும் அவரது மனைவியான அபர்ணா கிருஷ்ணன் தம்பதிக்குப் பிறந்த ஏகாக்ரா, 2023 நவம்பர் மாதம் பெங்களூருவில் பிறந்தார்.
ஏகாக்ரா வெறும் 4 மாதம் இருக்கும்போது, நாராயண மூர்த்தி அவருக்கு பரிசாக 0.04% இன்போசிஸ் பங்குகளை (அதாவது 15 லட்சம் பங்குகள்) வழங்கினார். அப்போது அதன் சந்தை மதிப்பு மட்டும் ரூ.240 கோடி ஆக இருந்தது.
2024 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான டிவிடெண்டாக மட்டும் ஏகாக்ரா ரூ.3.3 கோடி வருமானம் பெற்றுள்ளார். இதுவரை அவர் பெற்ற மொத்த டிவிடெண்ட் வருமானம் ரூ.10.65 கோடியை தொட்டுள்ளது.
இந்த தகவல்கள் வெளிவந்ததும், ஏகாக்ரா இந்தியாவின் “இளம் கோடீஸ்வரர்” என்ற பட்டத்துக்குப் பெருமையாகக் கருதப்படுகிறார். வெறும் 1 வயது 5 மாதத்தில் இத்தகைய வருமானத்தைப் பெற்ற சிறுவராக அவர் குறிக்கப்படுகிறார்.
நாராயண மூர்த்தியின் குடும்பத்தில் இது முதல் முறையல்ல பங்குகளை குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசளிப்பது. ஆனால், இவ்வளவு சிறிய வயதிலேயே ஒரு குழந்தைக்கு இத்தனை பெரிய அளவில் வருமானம் கிடைத்துள்ளதே, நிதி உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.