லக்னோ : இந்தியா முழுவதும் பெருமை கொள்ளச் செய்யும் வகையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை அதிகாரி சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குள் (ISS) பயணிக்கிறார். வரலாற்றில் இரண்டாவது இந்தியராக ISS-ஐ அடையப்போகும் சுபன்ஷு, 14 நாட்கள் அங்கே தங்கியிருந்து 60க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகளில் பங்கேற்க உள்ளார்.
2006ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த சுபன்ஷு சுக்லா, மிக் மற்றும் சுகோய் போர் விமானங்களை 2,000 மணி நேரத்திற்கு மேல் இயக்கிய அனுபவம் கொண்டவர். அவரது தேர்ச்சி மற்றும் திறமை காரணமாகவே, 2019ல் இந்தியாவின் மனித விண்வெளி திட்டமான ‘ககன்யான்’ திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
சுபன்ஷு, ரஷ்யாவின் யூரி ககாரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தில் ஒரு ஆண்டு அடிப்படை பயிற்சி பெற்றார். தற்போது, நாசா, இஸ்ரோ, ஐஎஸ்எஸ், ஆக்சியம் ஸ்பேஸ் உள்ளிட்ட நான்கு முக்கிய விண்வெளி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ‘ஆக்சியம்-4’ திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு பயணிக்கிறார்.
விண்வெளியில் சுக்லா செய்யும் பணிகள் என்ன ?
சுபன்ஷு சுக்லா, விண்வெளியில் 14 நாட்கள் தங்கியிருக்கும் காலத்தில், இஸ்ரோ மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) இணைந்து நாசாவின் ஆதரவுடன் உருவாக்கிய ஏழு முக்கிய பரிசோதனைகளை மேற்கொள்வார். இந்த ஆய்வுகள், நீண்ட கால விண்வெளிப் பயணங்களுக்கு தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டு முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டவை.
அனுபவம் – எதிர்காலத்துக்கான கட்டமைப்பு !
இருபது நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் இந்த திட்டத்தில், சுபன்ஷு மட்டும் அல்லாது, மற்ற மூன்று விண்வெளி வீரர்களும் பங்கேற்கின்றனர். மொத்தம் 60 அறிவியல் பரிசோதனைகள் மற்றும் 31 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநடவடிக்கைகள் இந்த பயணத்தில் இடம்பெறவுள்ளன.
சுபன்ஷு பூமிக்கு திரும்பியபின், அவரது அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ‘ககன்யான்’ திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகேஷ் சர்மாவின் பின்… இன்னொரு இந்தியர் !
1984ஆம் ஆண்டு ராகேஷ் சர்மா, இந்தியாவை சார்ந்த முதலாவது விண்வெளி வீரராக சர்வதேச விண்வெளி மையத்தில் காலடி வைத்தார். அவரது பின் தொடர்ந்து, தற்போது சுபன்ஷு சுக்லா இந்த பெருமையை பெறும் இரண்டாவது இந்தியராக வரலாற்றில் இடம்பிடிக்கிறார்.