மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி சார்பில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மணிவிழா ஆண்டை முன்னிட்டு உலக அமைதி, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. ஆண், பெண் என இருபிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் 100-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் திருநாவுக்கரசு ஏற்பாட்டில் காவேரி நகரில் தொடங்கி நடைபெற்ற மாரத்தான் போட்டியை மயிலாடுதுறை ஏடிஎஸ்பி ஜெயக்குமார், வர்த்தக சங்க பொறுப்பாளர் அசோக் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். போட்டி தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளியில் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். இரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.3000, 2-ஆம் இடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.2000, 3-ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.1000, 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்பட்டது.
